Tuesday, September 29, 2009

கடத்த வந்த பயங்கரவாதியைச் சுட்டுக் கொன்ற பெண்

இளம் பெண்ணைக் கடத்த வந்த பயங்கரவாதிகளை, அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்துச் சுட்டு ஓடஓட விரட்டிய சம்பவம் ஜம்மு காஷ்மீர் பெண்களுக்கு சற்று உற்சாகத்தையும் புது தெம்பையும் கொடுத்திருக்கிறது. புலியை முறத்தால் விரட்டிய காலம் போய் துப்பாக்கியால் பயங்கரவாதியை விரட்டும் நிலைக்கு பெண்களின் வீரம் இன்று உயர்ந்திருக்கின்றது என்றால்..... ஜம்மு காஷ்மீரில் ரசூரி மாவட்டத்தில் 6 தீவிரவாதிகள் ஒரு வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு குடும்பத்தினருடன் இருந்த இளம் பெண்ணைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என துப்பாக்கி முனையில் மிரட்டினர். ஆனால் பெற்றோர்கள் ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் பெற்றோர்களை அடித்துத் தாக்கினர். தலைதெறிக்க ஓட்டம் தொடர்ந்து நடந்த போராட்டத்தை பார்த்துக் கொதித்துப்போன இளம்பெண் ரக்சனா கவுசார் ஒரு பயங்கரவாதி மீது பாய்ந்து அவரை சுவர் மீது தள்ளி விட்டார். அந்த பயங்கரவாதியின் ஏ.கே. 47 ரக துப்பாக்கியைப் பிடுங்கினார். உடனடியாக பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டார். ஒரு பயங்கரவாதி பலியானார். இன்னொருவருக்குக் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் தலைதெறிக்கத் தப்பித்து ஓடினர். இந்தச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓர் இளம் பெண் பயங்கராவதிகளிடம் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி விரட்டியது குறித்து அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ந்து போயினர். மேற்படி பெண்ணை பாராட்டினர். இருப்பினும் தப்பித்து ஓடிப்போன பயங்கரவாதிகளால் தமக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரிடலாம் எனக் கூறி, அருகில் உள்ள பொலிசார் தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து இளம்பெண் ரக்சனா கூறுகையில், "பயங்கரவாதியிடம் பறித்தத் துப்பாக்கியைப் பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டேன். எனக்கு கிராம பாதுகாப்பு கமிட்டியினர் கொடுத்த துப்பாக்கி சுடும் பயிற்சி இந்நேரத்தில் கைகொடுத்து உதவியது. இது தான் என்னையும், என் குடும்பத்தினரையும் காப்பாற்றியது" என்றார்

No comments: