Friday, August 28, 2009

கிரிக்கெட் வசைபாடிகள் part 2 (18+) மட்டும்

கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:
ரவி சாஸ்திரி- மைக் விட்னி (Ravi Shastri- Mike Whitney)
இந்தியர்கள் (இப்போதைய அணியை விடுங்கள்) பெரியளவில் வசைபாடுவது இல்லை. ஆஸ்திரேலியர்கள் அதை முகழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள். 1991/92 ஆஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் ஒரு டெஸ்ட் போட்டி. ஷேன் வார்னின் முதல் டெஸ்ட் போட்டி. ஏற்கனவே 5 டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றிருந்தது. காயமுற்ற ஒரு வீரருக்காக களத்தில் மிட்-ஆனில் களத்தடுப்பில் இருந்த விட்னியை நோக்கி பந்தை அடித்த சாஸ்திரி ரண் எடுப்பதுபோல் பாவ்லா காட்ட, பந்தை எடுத்த விட்னி சொன்னார், 'கிரீஸை விட்டு வெளிய வந்தே, மவனே உன் தலையை உடைச்சுடுவேன்' என்று. சாஸ்திரி அடுத்த நொடி அழகாகச் சொன்னார் ‘நீ பேசற அளவுக்கு விளையாடத் தெரிஞ்சிருந்தா இப்படி சப்ஸ்டிடியூடாகவா ஃபீல்ட் பண்ணுவே. போப்பா போ, முதலில் சரியா விளையாடக் கத்துக்கோ'. சாஸ்திரி அந்தப் போட்டியில் 206 ரன் அடித்தார். ஆஸியின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கட் வேறு எடுத்து கிட்டத்தட்ட இந்தியாவை ஜெயிக்கவைத்தார். சச்சினுக்கும் சிட்னி கிரிக்கட் மைதானத்துக்குமான காதல் கதை அவர் அடித்த 148* உடன் ஆரம்பமானது.
இயன் ஹீலி- கட்டையான, குள்ளமான ஆட்டக்காரர் (Ian Healy and A Short Chubby Batsman)
ஆஸி அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, புகழ் பெற்ற ஹான்ஸி குரொஞ்சேயின் (Hansie Cronje) ஃப்ரீ ஸ்டேட் (Free State) மாநிலத்துக்கு எதிராக ஒரு பயிற்சி ஆட்டம் ஆடினார்கள். ஹான்ஸியின் அணியில் ஒரு கட்டையான குண்டான பேட்ஸ்மன் ஒருவருக்கு ஷேன் வார்ன் பந்து வீசிக்கொண்டிருந்தார். விக்கட்-கீப்பர் ஹீலி வார்னிடம் நகைச்சுவையாக ‘ ஷேன், பிட்சின் அரைவாசியில் ஒரு மார்ஸ் சாக்லெட் பாரைப் போடு. இந்தக் குண்டன் அதை எடுக்க வெளியே வருவான் அப்போ இவனை ஸ்டம்ப் பண்ணிடறேன்' என்றார். அந்த பேட்ஸ்மான் சிரித்து விட்டு, ஷார்ட் லெக்கில் களத்தடுப்பில் இடுபட்டிருந்த டேவிட் பூனைப் (David Boon) பார்த்துச் சொன்னார், ‘இல்லை இல்லை, நம்ப பூனி (டேவிட் எனக்கு முன்னமே அதை எடுத்துடுவான்'. டேவிட் பூனின் தோற்றம், அவரது நடை, உடை பாவனை தெரிந்தவரானால் இந்தக் கடியிலுள்ள ஆழம் புரியும் உங்களுக்கு.
மேர்வ் ஹ்யூஸ்- ஹான்ஸி குரோஞ்சே (Merv Hughes- Hansie Cronjea)
மேலே ஹீலி கடி வாங்கிய அதே மேட்ச். ஹான்ஸி அபாரமாக ஆடிக் கொண்டிருந்தார். அநேக பந்துகள் பவுண்டரி லைனுக்குப் பறந்து கொண்டிக்க, அப்போட்டியில் ஆலம் பார்டருக்கு (Alan Border) பதிலாக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மார்க் டெய்லர் (Mark Taylor) ஹ்யூஸை பந்து வீச அழைத்தார். அவரையும் ஹான்ஸி விட்டு வைக்கவில்லை. கிரிக்கட் காமெடிகளில் அல்டிமேட் ஸ்டாரான ஹ்யூஸ் சும்மா விடுவாரா. ஒரு பந்தை ஹான்ஸி அடித்ததும் விறு விறுவென நடந்து பேட்ஸ்மனிடம் போனார். 'நீ சரியான ஆளுன்னா இத பவுண்டரிக்கு அடியேன் பாக்கலாம்' என்று ஹான்ஸிக்கு தன் பின்புறத்தைக் காட்டியபடி ‘பர்ர்ர்ர்ர்ர்' என்று பெரிதாகக் காற்றை வெளியேற்றிவிட்டுத் திரும்பினாராம் ஹ்யூஸ். ஆஸிவீரர்கள், ஹான்ஸி, அம்பயர்கள் என்று எல்லோரும் சிரித்து முடிக்கவே ஐந்து நிமிடம் ஆயிற்றாம்.
ஃப்ரெட் ட்ரூமன் - கேரத் மக்கின்ஸி (Fred Trueman- Garath Mackenzie)
ஃப்ரெட் ட்ரூமன் இங்கிலாந்தின் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பெயர். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கட் வரலாற்றிலேயே முதன் முதலாக முன்னூறு விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் இவர்தான் (எல்லா நாட்டு வீரர்கள் மத்தியிலும்). இப்படிப்பட்ட ட்ரூமன் ஆஸ்திரேலியாக்கு எதிரான ஒரு போட்டியில் பவுண்டரி லைனில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர் நின்ற இடத்தின் அருகே பெவலியனில் இருந்து களத்துள் நுழையும் வாசல் இருந்தது. அப்போது ஒரு ஆஸி விக்கட் வீழ்ந்தது, இங்கிலாந்து வீரர்கள் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்துவிட்டு தத்தம் களநிலைகளுக்கு மீண்டனர், ட்ரூமன் உட்பட. அப்போது உள்ளே வந்து கொண்டிருந்த ஆஸி ஆட்டக்காரர் மக்கின்ஸி பெவலியன்-மைதானம் இடைப்பட்ட கதவை மூட முயன்று கொண்டிருந்தார். ட்ரூமன் அவரருகே போய் ‘அப்பனே, என்ன செய்கிறாய்?' என்றிருக்கிறார். மக்கின்ஸி 'கதவை மூட முயல்கிறேன்' என்று சொல்ல, ட்ரூமன் சொன்னாராம். ‘இப்போ போன வேகத்திலே திரும்பப் போகிறாய். உள்ளே போவதுக்கு வசதியாக கதவைத் திறந்துவிட்டுத்தான் போயேன்'. அடுத்த ஓவரை ட்ரூமனே வீசவேண்டியிருந்தது. ஏற்கனவே கடுப்பை எல்லாம் அடக்கி மூன்று பந்துகளைத் தடுத்த மக்கின்ஸிக்கு ட்ரூமனைக் கண்டதும் பொறுக்காமல் விசிறினார்... போல்ட் (Bowled) ஆகி திரும்பினார்.
மேலும் சில சுவையான வசைகளோடு இன்னொரு பதிவில் சந்திப்போமா?

No comments: