கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் வசைபாடுதல் (Sledging) கிட்டத்தட்ட ஒரு நாகரிகமான செயலாகவே மாறிவிட்டது. இப்படியான வசைபாடுதல்கள் சில வேளைகளில் வரம்பு மீறியதாகவும், சில வேளைகளில் மிகவும் நகைச்சுவையாகவும் அமைந்து விடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில சம்பவங்களை இங்கே தொகுத்திருக்கிறேன்:
அப்துல் காதர் எதிர் கட்டையான சின்னப் பையன் (Abdul Quadir)
பாகிஸ்தானின் புகழ் பெற்ற லெக்-ஸ்பின் பந்துவீச்சாளரான அப்துல் காதிர் அன்றைக்கு கொஞ்சம் அதிகமாகவே கடுப்பாகியிருந்தார். அவருக்கு அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புகழ் பெற்று விளங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட முஷ்தாக் அகமது ஒரு ஓவரில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பால்குடிப் பையன் முஷ்தாக்கை இரண்டு முறை சிக்ஸருக்கு அடித்தான். அது ஒரு கண்காட்சி ஆட்டம் என்றாலும் காதிர் அதைக் கொஞ்சம் சீரியஸாகவே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். முஷ்தாக்கின்பால் அந்தச் சின்னப் பையன் காட்டிய அலட்சியத்தைக் கண்ட காதிர் அவனிடம் போய், ‘ஏய், நீ சின்னப் பையன்களை ஏன் அடித்து நொருக்குகிறாய்? முடிந்தால் எந்து பந்துகளை அடி பார்க்கலாம்' என்றார். காதிரின் அந்த வேண்டுகோளை அந்தப் பால்குடிப் பையன் சிரமேற் கொண்டு நிறைவேற்றி வைத்தான்.. காதிரின் அந்த ஓவரின் 6 பந்துகளில் பெறப்பட்ட ஓட்டங்கள் வருமாறு.. 6,0,4,6,6,6. அந்தத் தொடரிலேயே அந்தப் பால்குடிக்கு இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. பெரிதாக எதையும் அந்தத் தொடரில் சாதிக்காவிட்டாலும், 1989 இல் 16 வயது நிரம்பிய அந்தப் பையனின் இன்றைய சாதனைகள் மலைக்க வைப்பன. அந்தப் பையன் சச்சின் என்று நான் சொல்லவும் வேண்டுமா?
மார்க் வோ எதிர் அடம் பரோரே (Mark Waugh vs Adam Parore)
நியூசிலாந்து விக்கெட் காப்பாளரான பரோரே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துடுப்பெடுத்தாடக் களம் இறங்கினார். ஸ்லிப்பில் நின்ற மார்க் வோ அவரைப் பார்த்து ‘அட, உன்னை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இரண்டு வருஷத்துக்கு முன்னர் உன்னை அவுஸ்திரேலியாவில எப்படி பார்த்தேனோ, அப்படியே இருக்கிறாய். கொஞ்சம் கூட முன்னேறவேயில்லை' என்றார். பரோரே சொன்னார், ‘நான் முன்னேறவில்லை, அதை ஒத்துக் கொள்ளுறேன். ஆனால், நீ ரொம்பவே முன்னேறிவிட்டாய். இரண்டு வருஷத்துக்கு முன் ஒரு கிழவியைக் காதலித்துக் கொண்டிருந்தாய். இப்போது அவளை விட கிழவியான ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு விட்டாயாம் என்று கேள்விப்பட்டேன்'. மார்க் வோ கப்சிப்.
சேர். இயன் பொதம் எதிர் ரொட்னி மார்ஷ் (Sir. Ian Botham vs Rodney Marsh)
உலகப் புகழ் பெற்ற இருவரின் உலகப் புகழ பெற்ற மோதல் இது. ஆஷஸ் தொடரில் துடுப்பெடுத்தாட பொதம் களமிறங்கியபோது, அப்போதைய அவுஸ்திரேலிய விக்கட் காப்பாளரான மார்ஷ் அவரைப் பார்த்துக் கேட்டார், ‘இயன், உன்னுடைய மனைவியும் என்னுடைய குழந்தைகளும் நலமா நண்பனே' என்று. பொதம் சிரித்துவிட்டுப் பதில் சொன்னார், 'என்னுடைய மனைவி என்றைக்குமே நலம். உன்னுடைய குழந்தைகள் தெருவில் போகிற வருகிற பெண்கள் எல்லோருக்கும் பின்னால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்'.







No comments:
Post a Comment