Sunday, August 30, 2009

மிக மோசமான நுட்பத் தயாரிப்புகள்

1. அமெரிக்கா ஆன்லைன் (1989-2006) 1989ல் ஒரு சாதாரண மடலாடற்குழுவாக தொடங்கப்பட்ட இது, கடும் சர்ச்சைக்குரிய விளம்பர உத்திகளால் பெரும் வெற்றி பெற்றாலும் உலகின் மாபெரும் இணைய சேவை வழங்கிக்கு இனிய அனுபவங்கள் இல்லை. ஆங்காங்கே இலவச வழங்கிகள் வந்துவிட்ட போதிலும் மோசமான வாடிக்கையாளர் சேவை, கட்டுக்கடங்கா எரிதம் போன்றவற்றால் தலைவலிக்குள்ளானது. சேவையை நிறுத்தச் சொன்ன பயனாளர்களை நிறுத்தாமல் மேன்மேலும் கட்டணம் வசூலித்த வழக்கில் 2005 ஆகஸ்டில் 1.25 மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டியது. 2. RealNetworks RealPlayer (1999) "இந்த ஒலிக்கோப்பை உங்களால் கேட்க முடியாது, இந்த கோடெக்கைத் தரவிறக்கம் செய்யுங்கள்..... மன்னிக்கவும் இந்தக் கோடெக் எங்களிடம் இல்லை" இது போன்ற பல செய்திகளை ரியல்பிளேயரில் பார்த்திருப்பீர்கள். ஒரு உளவு மென்பொருளைப் போல எரிச்சலூட்டும் (இன்றும் தொடரும்) விளம்பரங்கள், இவையெல்லாம் ஒரு சிறு துளி தான். ரியல் ப்ளேயரின் பெரும் அபாயம் (Terms & Conditions-ல் சொல்லாமலே) அது தரவிறக்கும் ஒவ்வொரு பயனருக்கும் தனி எண் அளித்து அதன் மூலம் அவரின் பொழுதுபோக்கை அறியும் தன்மை பலரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் இது மைக்ரோசாஃப்டின் மீடியாப்ளேயருக்குச் சரியான போட்டி அளித்தது என்றால் மிகையில்லை. 3. Syncronys SoftRAM (1995) "உங்கள் கணினியில் மெமரி குறைவாக உள்ளதா? கவலை வேண்டாம். எங்களின் இந்த மென்பொருளை உபயோகித்தால் வேறெதுவும் செய்யாமலேயே உங்களுக்கு இருமடங்கு மெமரி கிடைக்கும்" என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு வந்த மென்பொருள். இறுதியில் கணினியின் ஹார்ட்டிஸ்க் பேஜிங் அளவை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவமானம், அபராதத்திற்கு உள்ளாகி இன்று ஒன்றுமில்லாமல் போனது. 4.Microsoft Windows Millennium (2000) இது யாருக்காவது நினைவில் இருக்கிறதா? மைக்ரோசாஃப்டின் இயங்கு தள வெளியீட்டிலேயே மிக மோசமான ஒன்று. Windows ME என்பதை Windows Mistake Edition என்றாலும் சரியே! ஆனாலும் பிற்காலத்தில் XP யில் பிரபலமான System Restore தத்துவம் இதில் தான் பிறந்தது. அதிலும் ஒரு சிக்கல். ஏதேனும் ஒரு கோப்பை வைரஸ் பாதித்து அதனை நீங்கள் கணினியிலிருந்து நீக்கியிருந்தால் அவையும் Restore செய்யப்படும், வைரஸ்களுடன்!!!! உண்மையில் Y2K என்றெல்லாம் மக்களைப் பூச்சாண்டி காட்டியது இந்த Millennium bug - ஐத் தானோ? 5.Sony BMG Music CDs (2005) கடையிலிருந்து இந்த இசைக் குறுந்தட்டுகள் வாங்கி உங்கள் கணினியில் இட்டு நீங்கள் பாடல் கேட்க நினைத்தால் உங்களுக்கு இசையால் மனம் இளைப்பாறுவதற்குப் பதில் இரத்த அழுத்தம் எகிறும். காரணம் இசையினால் அல்ல; இந்த Sony BMG Music CDs ஓர் உளவு மென்பொருளை உங்களிடம் கேட்காமலேயே நிறுவிவிடும். இதற்கு அவர்கள் சொன்ன காரணம், காப்புரிமையாம். கொஞ்சூண்டு Hacking அறிவு உள்ள சிறு விளையாட்டுப் பிள்ளை கூட உங்கள் கணினியைக் கைகடத்தல் செய்ய இயலும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உட்கார்ந்து விட்டால்.

No comments: