Thursday, August 27, 2009

சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இந்த கட்டடங்கள் ஒரு பக்கம் திருமணக் கூடங்களாகவும், இன்னொரு பக்கம் அவரது மக்கள் இயக்க அலுவலகங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த நெட்வொர்க்கை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பிய ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே இன்றைக்கு முழு வெற்றி பெற முடியாமல் ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம். ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்தது.

No comments: